காவிரி மீட்பு வெற்றி விழாவா? என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
கடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக “வெற்றி விழா”?
உச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை.
நடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு! நடுவண் அரசு அமர்த்த வெண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை! கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை! காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை! எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை!
குறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்! நடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது!
அடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல! மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும்! அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்!
கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள்! இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.