
கடலூர் தி.மு.க எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இங்கு பணியாற்றிய மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19-ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி.யும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல், காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே பா.ம.க வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் கே. பாலு, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் உடலைக் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து முடித்தனர்.
கோவிந்தராஜ் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்த நிலையில், சி.பி.சிஐ.டி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கோவிந்தராஜுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தரப்பட்டது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான ஆலையில் வேலை செய்த சில தொழிலாளிகளிடம் விசாரணை செய்தபோது, கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்து கொடுமை செய்தார்கள் என்று தொழிலாளர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய கேஸ் டைரியும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கோவிந்தராஜ் இறந்த அந்த இரவில் கோவிந்தராஜை காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மற்றும் கோவிந்தராஜை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றைச் சேகரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், எம்.பி ரமேஷ் மற்றும் 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதில், ரமேஷின் உதவியாளர் நடராஜன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அல்லாபிச்சை(53), பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தர் (எ) சுந்தரராஜ்(32), வடக்கு சாத்திப்பட்டைச் சேர்ந்த கந்தவேல்(47), பண்ருட்டி வினோத்(32) ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று (11/10/2021) காலை பண்ருட்டி நீதிமன்றத்தின் நீதிபதி முன் எம்.பி. ரமேஷ் ஆஜரானார். அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தரப்பு, நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரியது. அதனை ஏற்ற நீதிமன்றம், 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் ஆரம்பத்திலிருந்தே பாமக நிறுவனர் ராமதாஸ் எம்.பி.ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.