புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் குழ.சண்முகநாதன். (வயது50). செரியலூர் ஜெமின் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். அ.தி.மு.க பொறுப்புகளில் இருந்தவர். உள்கட்சி பிரமுகர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து அந்த கட்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பொறுப்பு வழங்கப்பட்டதுடன் செலவுகளையும் கட்சியின் தெற்கு மா.செ. பரணி கார்த்திகேயன் கவனித்துக் கொண்டார்.

இந்த நிலையில் தான் வடக்கு மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய பொறுப்பாளர்கள் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 6 ந் தேதி சண்முகநாதனுக்கு தெரியாமல் கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதுடன் பிரமாண்ட ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கட்சி தலைமை வரை இந்த பிரச்சனையை கொண்டு செல்ல சண்முகநாதன் முயன்றும் கட்சி தலைமை அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகநாதன் சனிக்கிழமை காலை அ.ம.மு.க வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தார்.
இது குறித்து குழ.சண்முகநாதன் கூறும் போது.. அ.தி.மு.க வில் நீண்ட காலம் அரசியலில் இருந்தேன். கடந்த ஆண்டு அ.ம.மு.க வில் இணைந்து புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றினேன். ஆனால் என்னை சுயமாக பணிசெய்யவிடாமல் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து வந்தனர். மேலும் வடக்கு மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி போன்ற ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்ய பட்டியல் தயார் செய்து வைத்திருந்த நிலையில் என் பரிந்துரை இல்லாமல் தெற்கு மாவட்டச் செயலாளரின் பரிந்துரையின் பேரில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மேல் அறந்தாங்கி நகரச் செயலாளர் சிவசண்முகம் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். அதனால் கட்சி நிர்வாகிகள் மன வேதனையடைந்துள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கே கட்சி பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று வழங்கி வருகின்றனர். அதனால் சமீப காலமாக ஜாதிக்கட்சி போல அமைந்துவிட்டது. இது பற்றி எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரம் கேட்டால் கிடைக்கவில்லை. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்னை சென்று முதலமைச்சரை பார்த்து அ.தி.மு.க வில் இணைந்துவிட்டேன். என் கட்சிப்பணிகளைப் பார்த்து பொறுப்புகள் கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் பதவிகளை எதிர்பார்த்து தாய் கழகத்தில் இணையவில்லை என்றவர், என்னைப் போல விரக்தியில் உள்ள பலரும் தேர்தலுக்கு முன்பே அ.ம.மு.க வில் இருந்து விலகி அ.தி.மு.க வுக்கு வருவார்கள் என்றார்.