Skip to main content

'மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்' - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

dmk mkstalin statement

 

மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையில் பெய்த கனமழையின் போது இரும்புலியூர் மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்த, இந்த மழைநீர் வடிகால் கால்வாய் அந்தத் தாய்க்கும், மகளுக்கும் மரணக் குழியாக மாறியிருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணமாகும்.

 

திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி, மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட 2018- ஆம் ஆண்டிலேயே போடப்பட்ட திட்டத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசிடம் அ.தி.மு.க அரசும் வலியுறுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு அரசுகளின் தோல்வியினால், ஏற்கனவே தந்தையை இழந்து துயரத்தில் இருந்த குடும்பத்தில், தாயும் மகளும் அரசின் அலட்சியத்திற்குப் பலியாகியுள்ளார்கள்.

 

தாயையும், அக்காளையும் இழந்துள்ள இவாஞ்சலினுக்கு பெயரளவுக்கு நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக, அவரை முழுமையாகக் காப்பாற்றிட அ.தி.மு.க அரசு போதிய நிதியுதவி செய்ய முன்வர வேண்டுமென்றும், அந்தப் பைபாஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்