சேலம் அருகே, கடன் சுமையால் வாலிபர் குடும்பத்துடன் தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (32). திருச்சியில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சதீஸ்குமார் தனது வேலையை சமீபத்தில் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான சதீஸ்குமார், செல்போன் கடன் செயலிகள் மூலம் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
கடன் தொகைக்கு உண்டான வட்டி, அசல் என வாங்கிய கடனுக்கு அதிகமாகவே சுமார் 15 லட்சம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்தி உள்ளார். ஆனாலும் கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் சதீஸ்குமாரை செல்போன் மூலம் தினமும் அழைத்து, மேலும் வட்டி, அசல் தொகையை செலுத்த வேண்டும் என்று ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் உன் செல்போனில் உள்ள அனைத்து வாட்ஸ்ஆப் எண்களுக்கும் உன்னையும், குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து தகவல்களை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சதீஸ்குமார், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். தனது மனைவி, குழந்தையுடன் ஓமலூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மருந்து கடைகளில் இருந்து 60 தூக்க மாத்திரைகளை வாங்கி வந்த சதீஸ்குமார், அதை குளிர்பானத்தில் கலந்து மனைவி, மகன் ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். மூவரும் அறையில் மயங்கிக் கிடந்தனர்.
இந்நிலையில் விடுதி ஊழியர் ஒருவர், அந்த அறைக்கு ஏதேனும் பொருள்கள் தேவையா? என கேட்பதற்காக அறைக் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது மூவரும் மயக்க நிலையில் அசைவற்றுக் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.