Skip to main content

அபராதத் தொகையை கலைஞர் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

 madurai High Court ordered that the fine should be used to buy books for kalaignar library

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், ‘தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கிராமத்தில் உள்ள புரோட்டா கடை மற்றும் கட்டடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து இருந்தனர். அதனை அகற்றவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக உரிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கும்படி  வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு ஒன்று அளித்தேன்.

 

ஆனால், நான் அளித்த கோரிக்கை மனு குறித்து அதிகாரிகள் எந்தப் பதிலும் எனக்கு அளிக்கவில்லை.  அதனால், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான எனது மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்யாமல், அந்த மனுவைப் பரிசீலனை செய்ய  நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், மாரியப்பன் அளித்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அதில் அவர், ‘மனுதாரர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையைத் தடுக்கும் வகையில், மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்’ என்று கூறி வாதாடினார்.

 

அதனைத் தொடர்ந்து, விசாரணையின் முடிவில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை மனுதாரர் ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி நீதிபதிகள், ‘உண்மைத் தகவலை மறைத்து இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். அதனால், மனுதாரர் தாமாகவே முன்வந்து அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து மனுதாரருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும். கலைஞர் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் மதுரை உயர்நீதிமன்றம் சார்பில் தனி வங்கிக் கணக்கை மதுரை உயர்நீதிமன்றப் பதிவாளர் தொடங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

 

இனிமேல், விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்ததால், சம்பந்தப்பட்டவர்கள் மேற்கண்ட வங்கிக் கணக்கில் அபராதத்தைச் செலுத்தும் விதமாக இந்த ஏற்பாட்டை  நீதிபதிகள் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்