Skip to main content

நெடுஞ்சாலையில் திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை..!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

DMK member karunakaran passes away in thiruvallur

 

திமுக நிர்வாகியை நெடுஞ்சாலையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

திருவள்ளூர் அருகே வெள்ளவேடு அடுத்துள்ள மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன்(45). இவர், திமுகவின் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். இவர், நேற்று (02.02.2021) மாலை பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வெள்ளவேடு எனும் இடத்தில் இருக்கும் ஒரு பாலம் அருகே நின்றுகொண்டிருந்தார்.

 

அப்போது, அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர்க் கொண்ட மர்ம கும்பல், பட்டா கத்தியால் கருணாகரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த கருணாகரன் சாலையில் இரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் அந்த இடத்தைவிட்டு தப்பியோடியுள்ளது. படுகாயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல்துறையினருக்குத் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கருணாகரனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப காவல்துறையினர் முயற்சித்தபோது, மேல்மணம்பேடு கிராம பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அதன்பின் கருணாகரனின் உடலை கைப்பற்றி காவல்துறையினர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இதற்கு முன்னதாக, 2016ஆம் ஆண்டு கருணாகரனின் சகோதரியின் கணவரும், மேல்மணம்பேடு ஊராட்சித் தலைவருமான தங்கராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு தங்கராஜின் தம்பி வெங்கட்ராமன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கருணாகரனும் நேற்று கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து, வழக்குப் பதிவுசெய்துள்ள வெள்ளவேடு போலீஸார், தங்கராஜ் மற்றும் வெங்கட்ராமன் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள்தான் கருணாகரன் கொலையிலும் ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு யாரேனும் இக்கொலையில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்