திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் கிராமத்தில் உள்ள விவசாயி கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கரும்பு தோட்டத்திற்கு சட்டவிரோதமான முறையில் மின்வேலியை அமைத்துள்ளார். கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்கவே மின்வேலிகள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 20) மற்றும் சாய்குமார் (வயது 27) ஆகியோர் எதிர்பாராத விதமாக இந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே இருவரையும் காணவில்லை என இருவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தேடியுள்ளனர்.
அப்போது இருவரும் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிப்பட்டு போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த உயிரிழப்புக்கு காரணமான கோவிந்தராஜை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். சட்டவிரோதமாக அமைக்கபட்ட மின்வேலியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.