தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தனது தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், முதலமைச்சரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் அதிகளவில் இழப்பீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் வறட்சிக்காக முதன்முதலாக நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் 12,51,000 குடும்பங்கள் பயனடைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் எந்த புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க. அரசு. காவிரி, அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க திட்டம் தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் பேரில் நடந்தாய் வாழி காவிரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்தது அ.தி.மு.க. அரசு.
குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றினோம். கடந்த ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டு போயுள்ளது. கடந்த 2010- ஆம் ஆண்டு காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்ததும் தி.மு.க. தான், அதை ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் தி.மு.க. தான். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அம்மா மினி கிளினிக் மூலம் ஏழை மக்களுக்கு மருத்துவம் அளிப்பதைக் கூட தி.மு.க. அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை மாநகரில் குற்றங்களைத் தடுக்க அ.தி.மு.க. ஆட்சியில் சிசிடிவி பொருத்தப்பட்டது. அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். அதிக அளவிலான தார் சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டினோம். சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா கொண்டு வந்தது. மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. அரசு" எனத் தெரிவித்தார்.