கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லாததால் மனு கொடுக்க சென்ற திமுகவினர் எருமை மாட்டிடம் மனு அளித்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் 2வது கட்டமாக ஊராக உள்ளாட்சி தேர்தல் கடந்த 30 ம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதே பகுதியில் சி.எஸ்.ஜெயின் தனியார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வாக்குப்பெட்டிகள் அனைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.( 2ம் தேதி) இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும் என்று திமுக ஒன்றிய செயலாளர் தங்கஆனந்தன் தலைமையில் திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவினை அளிக்க ஒன்றிய அலுவலகம் சென்றனர். அப்போது அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட யாரும் இல்லாததால் எருமை மாட்டிடம் மனு அளித்து விட்டும், ஒன்றிய அலுவலக சுவற்றில் மனுவை ஒட்டிவிட்டும் சென்றனர்.தி.மு.க ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜன், ஒன்றிய துணை செயலாளர் பத்பநாபன், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இன்று (2ம் தேதி) வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு ஏராளமானோர் காத்துக்கிடந்து திரும்பி சென்றனர். கடந்த 29ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான முறையில் பணி ஆணை வழங்காமல் குளறுபடி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.