மக்களவை கூட்டத்தொடர் கடந்த 17- ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகின்றனர். இதற்கு சம்மந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் அமைதியான முறையிலும், ஆக்கப்பூர்வமாக நடைப்பெற்று வருகிறது. இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்பிக்கள் குரல் நாடாளுமன்றம் முழுவதும் இரு அவைகளிலும் ஓங்கி ஒளித்து வருகிறது.
திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்கள் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசினர். அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்பியான ஹெச்.வசந்தகுமார் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதே போல் இந்திய முஸ்லீம் கட்சியின் ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி சுற்றுலா தலமான ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாகவும், திமுக உறுப்பினர்கள் பொய் பரப்புரையை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டினார். இவரின் பேசசுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,அவையில் சில நிமிடங்கள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு பல்வேறு உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றன. தமிழக எம்பிக்களின் கேள்விக்கு உடனுக்குடன் மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை-5 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.