
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்படுவதாக கூறப்பட்டது. அதே சமயம் தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 35க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (12.04.2025) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக பா.ஜ.க.வின் 13வது தலைவராக நயினார் நாகேர்ந்திரன் தேர்வு செய்யப்பட உள்ளார். நயினார் நாகேர்ந்திரனை எதிர்த்து யாரும் போட்டியிடததால் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் இன்னும் சற்று நேரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி உறுதியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.