
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமமாக கோயில்களில் உண்டியல் திருட்டுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சில கோயில்களில் ஒரே நேரத்தில் உண்டியல் திருடப்பட்டிருந்தது. அதே போல மாவட்டம் முழுவதும் ஏராளமான கோயில்களில் மர்ம நபர்களால் பூட்டுகள் உடைக்கப்பட்டு உண்டியல்கள் திருடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அறந்தாங்கி அருகியில் உள்ள கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள அரியநாயகி அம்பாள் கோயிலில் புதன் கிழமை இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வரும் 3 மர்ம நபர்களில் ஒரு நபர் மட்டும் இறங்கிச் சென்று கோயிலின் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று எவர்சில்வர் உண்டியலை தூக்கிக் கொண்டு வெளியே வந்து அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்றவர்களுடன் ஏறிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கிருந்து சுமார் அரை கி மீ தூரத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு காசு, பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உண்டியல் மட்டும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்மந்தமாக கோயில் நிர்வாகிகள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதே போல இதே நாளில் அன்னவாசல் அருகில் உள்ள வீரப்பட்டி கிராமம் வவ்வாநேரி பிடாரியம்மன் கோயிலுக்கு கடப்பாறை கத்தியுடன் வந்த ஒரு மர்ம நபர் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருட முயன்ற போது வெளியில் சத்தம் கேட்டதால் தப்பி ஓடிவிட்டார். தப்பிச் செல்லும் போது கடப்பாறை, கத்தியை போட்டுவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகளும் பதிவாகி உள்ளது.
இது போல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோயில் உண்டியல் திருட்டுகள் பொதுமக்களை அச்சுருத்தியுள்ளது.