
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அமத்ஷா 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (11.04.2025) காலை 35க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் அதன் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தத் தேர்தலில் தேசிய அளவில் பிரதமர் மோடியின் தலைமையிலும், மாநில அளவில் அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலும் போட்டியிடும்.
கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.விடம் இருந்து எந்த நிபந்தனைகளும் கோரிக்கைகளும் வைக்கப்படவில்லை. அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் நாங்கள் (பா.ஜ.க.) தலையிட மாட்டோம். இந்தக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அ.தி.மு.க.வுக்கும் சாதகமாக இருக்கும். 2026ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பிறகு ஆட்சியில் பங்கீடு மற்றும் அமைச்சர்கள் பங்கீடு என இந்த இரண்டும் பின்னர் முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில், உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, சனாதன தர்மம் மற்றும் மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சினைகளை தி.மு.க. எழுப்புகிறது.
வரவிருக்கும் தமிழகத் தேர்தல்களில், மக்கள் தி.மு.க.வின் ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அதன் அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பார்கள். தி.மு.க. அரசு ரூ. 39 ஆயிரம் கோடி மதுபான ஊழல், மணல் சுரங்க ஊழல், எரிசக்தி ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து ஊழல், பணமோசடி ஊழல் ஆகியவற்றைச் செய்துள்ளது. தமிழக மக்களுக்கு திமுக பதிலளிக்க வேண்டி உள்ளது. தி.மு.க. மீது இன்னும் பல மோசடிகள் உள்ளன. தமிழக மக்கள் இதற்கான பதில்களைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடமும், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தேடுகிறார்கள்” எனப் பேசினார்.