





தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் திருமண நாளான இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பின் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''இந்த நிமிடம் வரைக்கும் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதம் செய்வதால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வர இருக்கிற நிலையில் காலதாமதம் பண்ணாமல் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதைவிட, அப்போது அமெரிக்காவில் சிகிச்சைக்காக இருந்தோம். இருப்பினும் குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. இப்பொழுது நாங்கள் எங்களுடைய பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். 234 தொகுதிகளுக்கும் மாவட்டம், மண்டலம், பகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து பூத் கமிட்டி வரைக்கும் அமைத்து விட்டோம்.
234 தொகுதியிலும் தேமுதிக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. மூன்று முறை பாமக தலைவரை அதிமுகவினர் சந்தித்துள்ளார்கள் என்கிறார்கள். அவர்கள் எதற்காக சந்தித்தார்கள் என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. 20 சதவீத இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்காக தான் அவர்கள் போய் சந்தித்தார்கள் என்பது தான் அதிகாரபூர்வமான தகவலாக வெளிவருகிறது'' என்றார்.
மேலும், பாமக இடம் பெறும் அணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு, ''நேற்று மண்டல பகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து எங்களுடைய கருத்துக்களை நாங்கள் பரிமாறிக்கொண்டோம். ஆனால் இறுதி அறிவிப்பு என்பது செயற்குழு, பொதுக்குழு கூடிய பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு தான் இறுதி அறிவிப்பாக இருக்கும்'' என்றார்.