சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 'தமிழ்நாட்டில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது' என பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் பேசுகையில், ''மணிப்பூரில் என்ன நடந்துட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்க தான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கின்ற அரசு எப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் என்ற ஊருல என்ன நடந்தது என எல்லாருக்குமே தெரியும். சமூகநீதிப் பேசுகின்ற அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே. இவ்வளவு காலங்கள் தாண்டி, இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அது தான். இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார். நடக்கிற பிரச்சனைகளுக்கெல்லாம் நம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கிற பிரச்சனைகள் ஒன்னா ரெண்டா?
பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக இதையெல்லாம் நாம் பார்க்கிறோம், படிக்கிறோம், மற்றவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு என்ன தெரியுமா? ரொம்ப சிம்பிள் தான். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு அமைந்து விட்டாலே போதும். இங்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கு சம்பிரதாயத்துக்காக டிவிட் போடுவது. சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என காட்டிக்கொள்வது. சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று கொண்டு போட்டோ எடுப்பது. எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனா என்ன பண்றது நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அதுபோன்று செய்ய வேண்டியது ஆகிவிட்டது. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.
இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து விசிக எம்பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் திரு விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் ‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது' என தெரிவித்துள்ளார்.
அரசியல் ஒப்பனையின் ஆயுள்
— Dr D.Ravikumar (@WriterRavikumar) December 6, 2024
தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட திரு விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும்… pic.twitter.com/G545YaQmjA