அரசு பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்த மேசை மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் அ.மல்லபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. செய்முறை தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவர்களும் மாணவிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வகுப்பறையில் இருந்த சில மாணவர்களும் மாணவிகளும் அங்கிருந்த மேசை, நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகளை அடித்து நொறுக்கினர். மேலும், நோட்டு, புத்தகங்களைக் கிழித்து வீசியுள்ளனர். இதனால் வகுப்பறையே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள், நடந்தவற்றை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறியதுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கடிதமும் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களிடமும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை 5 நாட்களுக்கு பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.