தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் மலைப்பாதையில் கார் மீது நூல் லோடு ஏற்றிச்சென்ற லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி சத்தியவாணி (65). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சத்தியவாணி, திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் அவருடைய தம்பி கோபிநாத் வீட்டில் தங்கி, மருத்துவ சிகிச்சை பெற திட்டமிட்டிருந்தார்.
இதையடுத்து அவர், தனது தங்கை அன்புமணி (58), மகள் கவிதா (46) ஆகியோருடன் ஒரு வாடகை காரில் திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்தார். காரின் பின்பக்க இருக்கையில் சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய மூன்று பேரும் அமர்ந்து இருந்தனர். காக்கனாம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் காரை ஓட்டிச்சென்றார். திங்கள்கிழமை (நவ. 25) மாலை 04.00 மணியளவில், தொப்பூர் கணவாய் மலைப்பாதையில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது.
அவர்களின் காரின் பின்னால், குஜராத் மாநிலத்தில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி நூல் பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. உடுமலையைச் சேர்ந்த செல்வம் (40) என்பவர் லாரியை ஓட்டிச்சென்றார். தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் வளைவை கடந்தபோது, திடீரென்று காரின் பின்னால் வந்து கொண்டிருந்த நூல் பண்டல் லாரி, காரின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் கார் நிலை தடுமாறி, முன்னே சென்று கொண்டிருந்த லாரியில் மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய மூவரும் உடல் நசுங்கி, நிகழ்விடத்திலேயே பலியாயினர்.
கார் ஓட்டுநர் ரமேஷ், பலத்த காயம் அடைந்தார். அவருக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினர், சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாக நிகழ்விடம் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த மூன்று சடலங்களையும், உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால், தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.