வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. இதில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த மழை சாத்தனூர் அணையில் தண்ணீர் தேக்க முடியாத சூழ்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி வீதம் தென்னை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் விளைநிலங்கள். குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை(1.12.2024) நள்ளிரவு முதல் இதில் கடலுரையொட்டி உள்ள தாழங்கூட, குறிஞ்சி நகர், குண்டுஉப்லவாடி, பெரிய கங்கணம் குப்பம், சின்ன கங்கணம் குப்பம், திடீர் குப்பம், எம்ஜிஆர் நகர், வெளிசெம்மண்டலம், உண்ணாமலைசாவடி, குடியிருப்புகளில் 7 அடிக்கு மேல் உள்ள வெள்ளநீர் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சூழ்ந்து தேங்கியது. பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு மூலமும் கயிறு கட்டியும் காப்பாற்றி பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனை ஒட்டி செவ்வாய்க்கிழமை காலை முதல் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் அளவு குறைக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி செல்கிறது பல்வேறு குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(3.12.2024) கடலூருக்கு வருகை தந்து தண்ணீர் தேங்கிய மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய கங்கணம் குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மஞ்சக்குப்பம் நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வெள்ள பாதிப்பு குறித்தும் அதனை மீட்டது குறித்தும் எடுக்க வேண்டிய மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமை செயலாளர் ககந்திப் சிங் பேடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன், திட்ட அலுவலர் சரண்யா உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையினர் உடன் இருந்தனர்.