
மறைந்த காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் 28.11.2018 புதன்கிழமை காலை கும்பகோணம் கோவிலில் திடீர் திருமணம் நடந்துள்ளது. மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் குரு மகன் கனலரசன் மற்றும் சில முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் நடந்த கையோடு காவல் நிலையத்திற்க்கு சென்று பாதுகாப்பு கேட்டு மணமக்கள் புகார் அளித்துள்ளார்களாம்.

இந்த திருமணத்தில் குருவின் மனைவி சொர்ணலதா கலந்து கொள்ளவில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரு மகன் கனலரசன், தன் தாயாரை அவரது உறவினர்கள் பார்க்கவிடவில்லை. அவரை மீட்டு தர வேண்டும் என வீடியோவில் பேசி வெளியிட்டார். அதையடுத்து சில நாட்களில் குருவின் தயார் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் ஆண்டிமடம் வைத்தியிடம் குருவின் தாயார், என் மகனை வைத்து பலனைடைந்தீர்கள். எங்கள் குடும்பத்தில் திரும்பிய திசை எல்லாம் கடனாக உள்ளது என்று தலையில் அடித்து கொண்டு கோபமும் ஆவேசமுமாக பேசியது வீடியோ காட்சியாக வந்து பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் இப்போது குருவின் மகளின் திடீர் திருமண செய்தி மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. குரு உயிரோடு இருந்தபோது மேடையில் பேசி பரபரப்பை உண்டாக்குவார். இப்போது அவரது குடும்பத்தினர்களும் அவ்வப்போது பரபரப்பை உண்டாக்கி வருகிறார்கள். இவைகளை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பாமக தரப்பினரும் மெளனமாக உள்ளனர். இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

ஜெ.குரு இருந்தபோதும் தற்போது மறைந்த பிறகும் பாமகவைச் சேர்ந்த பலர் அவரது புகைப்படம் இல்லாமல் திருமண பத்திரிக்கை அடிக்க மாட்டார்கள். திருமண பேனர்களில் அவரது படங்கள் இடம்பெறும். ஆனால் அவரது மகள் திருமணம், அவர் மறைந்து சில மாதங்களிலேயே மிக எளிமையாக நடந்தது பலருக்கு வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு பாமகவினர் வாழ்த்துக்களை வாட்ஸ் அப்புகளில் தெரிவிக்கின்றனர்.