கடலூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் தினம் தினம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் மற்றும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் 2600-க்கும் மேற்பட்டவர்கள் வெளியுற நோயாளிகளாக தினந்தோறும் சிகிச்சை பெற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாக உள்ளனர். இதேபோல் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர், புவனகிரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதை உறுதிபடுத்தி அவர்களுக்கு கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட முழுவதும் நடத்தபடுகிறது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகம், வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சரியான பராமரிப்பு இல்லாத இடங்களில் அபராத தொகையையும் வசூலித்து வருகிறார்கள்.
இதனிடையே டெங்கு கொசு உற்பத்தி செய்யும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடத்தில் டெங்குவை ஆய்வு செய்வதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் தான் முட்டையிடும் என்று கூறும் அதிகாரிகள். மாவட்டம் முழுவதும் கேபிள் டிவிக்கு ஒயர்கள் இழுக்கப்பட்டுள்ளது. இதில் இரு ஒயர்களின் இணைப்பில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தொங்கவிட்டுள்ளனர். தொங்கவிட்டதோடு சரி அவர்கள் இதனை சரியாக பராமரிப்பது கிடையாது. இதில் மழை நேரத்தில் மழைநீர் பாட்டிலுக்குள் சென்று அப்படியே நின்று விடுகிறது. சுத்தமான தண்ணீர் என்பதால் கொசுக்கள் உள்ளே சென்று டெங்கு கொசுவை அதிகம் உற்பத்தி செய்கிறது. எனவே டெங்குவை கண்காணிக்கும் அதிகாரிகள் கேபிள் டிவி ஒயர்களில் தொங்கும் பாட்டில்களை முதலில் ஆய்வு செய்யுங்கள்., பராமரிப்பு செய்தோ கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.