Skip to main content

மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சென்னை - சேலம் பசுமை சாலை திட்டத்தை அனுமதிக்க முடியாது - ராமதாஸ் எச்சரிக்கை

Published on 17/06/2018 | Edited on 17/06/2018


சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் பசுமைச் சாலைத் திட்டத்தை திணிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்திற்குள் செல்ல வசதியாக 277 கி.மீ நீளத்திற்கு 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் இந்த நெடுஞ்சாலையை அமைப்பதற்காக பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அது தங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் என்பதால் அத்திட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகக் கடமை ஆகும். ஆனால், தமிழகத்தில் நடப்பது அடிமைகளின் ஆட்சி என்பதால் தங்களின் எஜமானர்கள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினரை ஏவி, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, வீடு வீடாக சென்று மிரட்டுவது, காவல்துறை பாதுகாப்புடன் நில அளவை மேற்கொள்வது போன்ற அனைத்து வகையான அடக்குமுறைகளிலும் பினாமி அரசு ஈடுபட்டு வருகிறது.

 

 

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னை-சேலம் பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும், அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மற்றொரு புறம் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அவற்றை முறியடித்து சாலைத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும் போது நான்காவதாக பசுமை சாலைத் திட்டத்திற்கான தேவை என்ன? மக்கள் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என அவர்கள் துடிப்பது ஏன்? என்பன உள்ளிட்ட மக்களின் வினாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும்.

திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இரும்புத்தாது கொள்ளையடிக்கவுள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறுக்க முடியுமா? ஒரே ஒரு நிறுவனத்தின் நலனுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறித்து அமைக்கப்படும் சாலையை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றால், மக்களின் பயன்பாட்டுக்கான இரு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்களை எப்படி அழைப்பது? இது பெருந்துரோகம் அல்லவா?

இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தி அமைக்கப்படும் பசுமை சாலை மக்களின் நலனுக்கானதாகவும், வளர்ச்சிக்கு பயன்படுவதாகவும் அமையுமா? என்றால் அதுவும் இல்லை. இது முழுக்க, முழுக்க ஒரு தனியார் நிறுவன நலனுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. பினாமி ஆட்சியாளர்கள் வேண்டுமானால் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முழக்கம் எழுப்பலாம். ஆனால், தங்களின் நலனுக்கு எதிரான இத்திட்டத்தை பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

பாமக வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான யோசனைகளை ஆட்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேநேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் எனப்படுபவை மக்களுக்கானவையாக இருக்க வேண்டும். மாறாக, தனியார் கார்ப்பரேட் நிறுவங்களின் நலனுக்கானவையாக இருக்கக் கூடாது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கான சென்னை & சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை பாமக ஒருபோதும் அனுமதிக்காது. மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் 5 மாவட்ட மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம் தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்