
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 18வது சீசன் போட்டி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, இன்று மாலை 3 மணி போல் நடைபெற்ற 2வது போட்டியில், ராஜஸ்தான் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நாடே எதிர்பார்த்து கொண்டிருந்த சென்னை - மும்பை அணிக்களிடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (23-03-25) மாலை 7:30 மணியளவில் தொடங்கியது. ஐபிஎல் 2025 சீசனின் 3வது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை முடிவு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அனி முதலில் பேட்டிங் செய்து களமாடியது. அந்த அணி சார்பில், முதல் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 4 பந்துகளில் 1 ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். அதனை தொடர்ந்து, ரியான் ரிக்கல்டன் 7 பந்துகளில் 3 பவுண்டரிகள் எடுத்து 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய, வில் ஜாக்ஸ் 11 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 29 ரன்களிலும், திலக் வர்மா 31 ரன்களிலும் அவுட்டாகினர். அதன் பின்னர், களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பில் 155 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில், கலீல் அகமது 3 விக்கெட் எடுத்தார். நூர் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்தார். நாதன் எல்லிஸ் மற்றும் அஷ்வின் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அதில், ரச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து 65 ரன்களை எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். அதன் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை அடித்து 53 ரன்களை எடுத்து விக்னேஷ் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, சிவம் துபே, தீபக் ஹூடா சாம் கரண், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானாதால் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டத்தால், ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக, 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 158 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.