
ராஜபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
''விஸ்வகர்மா சமூகமான எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இஸ்லாமியர்களை சித்தப்பா என்றே அழைப்பேன். அவர்கள் என்னை அப்பு என்று அழைப்பார்கள்.
இஸ்லாமியர்கள் பிரதிபலன் பார்க்காமல் திமுகவுக்கு வாக்களித்தார்கள். திமுக இஸ்லாமியர்களுக்கு ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. இஸ்லாமியர்களை திமுக வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தியது. இஸ்லாமிய பள்ளி வாசல்களுக்கு காவல்துறையை அனுப்பி சோதனை செய்த வரலாறு திமுக ஆட்சியில் உண்டு. இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சியில் வீரமிக்க இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்சியை முடக்க திமுக முயற்சி செய்கிறது. இஸ்லாத்தைப் பகைத்தவர்கள் ஆண்டதாக வரலாறு கிடையாது. இஸ்லாமியர்களை நம்பியவர்கள் கெட்டதாக வரலாறு கிடையாது. அதிமுக அவர்களை நம்பி இருக்கிறோம். திமுக அவர்களை வம்புக்கு இழுக்கிறது.
நான் எங்கு இருந்தாலும் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. இஸ்லாமியர்களால் நாளை எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார். இஸ்லாமியர்கள் மீது பற்று கொண்டவராக அவர் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு துணையாக இருந்தவர்கள் எஸ்டிபிஐ கட்சியினர். இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக என்றும் நான் இருப்பேன். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் உதவுபவர்கள் இஸ்லாமியர்கள்” எனப் பேசினார்.