
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது ஈகுவார்பாளையம் என்ற ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் என்ற பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்துக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், “பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை அகற்றச் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டியிருந்தது. அதன் படி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை என அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு இன்று (14.02.2025) வந்தனர். வீடுகளை அகற்றுவதற்காக ஜெ.சி.பி. இயந்திரங்களுடன் வந்த போது, அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள், “தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட வில்லை. வசிப்பதற்கு மாற்று இடம் வழங்கப்பட வில்லை’ எனக் கூறி தங்களது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் மக்களிடம் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் குண்டு கட்டாகக் கைது செய்தனர். அதன் பின்னர் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் இடிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இடிக்கப்படும் வீடுகளைக் கண்டு வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழும் காட்சிகள் மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.