Skip to main content

50,000 கட்டினால் 100 நாளில் ஒரு லட்சம்... சுமார் 50 கோடி வரை மோசடி செய்ததாக புகார்... இருவர் கைது

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் நகரில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை மளிகை கடை நடத்தி வந்தார்  நா.இப்பம் வெங்கடேசன். இவரோடு இவரது நண்பர் பூட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கண்ணா ஆகிய இருவரும் மளிகைக்கடையில் இருந்தபடியே அப்பகுதி மக்களிடம் 50,000 கட்டினால் 100 நாட்களில் ஒரு லட்சம் திருப்பிதரப்படும் என விளம்பரம் செய்தனர்.


 

Chinnasalem



இதனை நம்பி பலர் 50,000 முதல் 5 லட்சம் வரை பணம் கட்டியுள்ளனர். முதலில் உறுதியளித்தபடி பணம் கட்டியவர்களுக்கு 100 நாட்களில் கட்டிய பணத்திற்கு மேல் இரட்டிப்பாக பணம் கொடுத்துள்ளனர். இந்த தகவல் தீயாக பரவியது. அப்பகுதி முழுவதும் சின்னசேலம், மாதவச்சேரி, சிறுவத்தூர், கல்லாநத்தம் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், ஊனத்தூர் என இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைக்தும், விவசாய நிலத்தை விற்றும் 50,000 முதல் 5 லட்சம் வரை மேற்படி மோசடி நபர்களிடம் பணத்தை செலுத்தி உள்ளனர்.
 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெங்கடேசன் நடத்தி வந்த லட்சுமி ஸ்டோர் கடை மூடியே இருந்தது. அவர் கூறியபடி பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை இரட்டிப்பாக தரவும் இல்லை. அப்போதுதான் வெங்டேசன் மோசடி நபர் என்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். அதில் சுமார் 50 கோடி வரை சுருட்டி உள்ளது என புகார் அளித்தனர்.


 

இதனையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், பணம் கட்டி ஏமாந்தவர்கள் கோபம் அடைந்து வெங்கடேசனின் லட்சுமி ஸ்டோர் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை வாரிச்சென்றனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெங்கடேசன், சுரேஷ் கண்ணா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
 

அவர்களிடமிருந்து 3 லட்சம் பணம், அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களின் மோசடிக்கு காரணம் மக்களின் பேராசையே என்கிறார்கள் அப்பகுதியிலுள்ளவர்கள்.


 

பொதுவாக தீபாவளிசீட்டு, பொங்கல் சீட்டு என மோசடி பேர்வழிகள் இதுபோன்று ஆரம்பித்து பணமோசடி, பணம் இரட்டிப்பு மோசடி செய்வது என்பது அவ்வப்போது நடைபெற்று வரும் தொடர் சம்பவங்களாக உள்ளன. இவைகள் பற்றிய விபரங்கள் பொதுமக்களுக்கு ஏற்கனவே ஏமாந்தவர்கள் மூலம் தெரிந்திருந்தும் தாங்கள் விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும், கார் பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என பேராசைப்பட்டு இப்படிப்பட்ட மோசடி ஆசாமிகளிடம் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது மக்களிடமே உள்ளது என்கிறது காவல்துறை.
 


 

சார்ந்த செய்திகள்