சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்று சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். இதில் டி.டி.எஃப்.வாசனின் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் டி.டி.எஃப். வாசன் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தும் பலனளிக்காத நிலையில் ஒருவழியாக சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.எஃப். வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பைக் தான் என்னுடைய உயிர். அதை எப்படி ஓட்டாமல் இருப்பேன். பைக்கும் ஓட்டுவேன் படமும் நடிப்பேன். இரண்டும் என் பேஷன். அதை விட்டுவிட மாட்டேன். இண்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கலாம், இல்லையென்றால் ஏதாவது மேல்முறையீடு செய்யலாம்'' என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இவர் கீழே விழுந்த தேதி தெரியுமா உங்களுக்கு யாருக்காவது (செய்தியாளர்களை நோக்கி) ஒருத்தங்க சொல்லுங்க. செப்டம்பர் 17ஆம் தேதி கீழே விழுந்தார். அன்று பெரியாருடைய பிறந்தநாள். காஞ்சிபுரத்தில் விழுந்தார். பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே வீழ்ந்த ஒருவன் மாபெரும் தலைவனாக இந்த மண்ணிலே வருவான்.. வருவான்... கை வலிகள் சரியான பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கும்'' என்றார். இதையெல்லாம் கேட்டு டி.டி.எஃப்.வாசனே குபீர் என சிரித்தார்.
'இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் உடம்ப ரணகளம் ஆக்கி வச்சிருக்காங்க' என மஞ்சள் வீரன் இயக்குநரின் பேச்சுக்கு இணையவாசிகள் கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர்.