திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இரவு 8 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கௌரி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே சென்றனர். பின்னர் கதவை தாழிட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் அலுவகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 60,540 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை விடிய விடிய 2 மணி வரை 6 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில் கணக்கில் வராத ரூபாய் 60,540 பறிமுதல் செய்துள்ளதாகவும், இதன் மீதான மேல் நடவடிக்கை உயரதிகாரிகள் எடுப்பதாகக் கூறிவிட்டு சென்றனர்.
இந்தச் சார்பதிவாளர் அலுவகத்தில் கடந்த சில மாதங்களாக போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாகவும், ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.