சென்னையில் கட்டடம் கட்டுவதற்குப் பள்ளம் தோண்டப்பட்டபோது அருகில் இருந்த வீடுகளின் பின்பக்க சுவர்கள் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெருங்குடி பர்மா காலனி பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் பத்தாவது தெருவில் ஐந்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் நான்கு அடுக்கு கட்டடம் ஒன்று கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெசிபிகள் வரவழைக்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு வந்தன.
அப்பொழுது கட்டுமான பணி நடைபெற்ற ஒரு பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு வீடுகளின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக வந்து ஆறுதல் தெரிவித்ததோடு, மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.