Skip to main content

தலித் பெண் ஊராட்சித் தலைவர் விவகாரம்; சி.பி.எம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Dalit woman panchayat leader issue; C.P.M. cuddalore

 

புவனகிரி அருகே தெற்குத் திட்டை தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தலித் என்பதால் தரையில் உட்கார வைத்து நடத்தப்பட்ட சாதிய ஆதிக்க வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், சதானந்தம், ராஜா, வாஞ்சிநாதன், மூர்த்தி, முத்து, கிருஷ்ணன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மேரி, சிதம்பரம் நகர தலைவர் அமுதா, செயலாளர் மல்லிகா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தெற்குத் திட்டை சம்பவத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். 

 

மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி துணைத் தலைவரை விரைவில் கைது செய்ய வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்து ஊராட்சித் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், தெற்குத் திட்டை மட்டுமல்ல தமிழகத்தின் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனையொட்டி கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது சாதிய பாகுபாடு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட தோல்வி என்றார். 

 

Ad

 

இதற்கென்று தனியாக சமூகநீதி பிரிவு ஏ.டி.ஜி.பி உள்ளார். அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சித் தலைவர்கள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு செய்து தமிழக அரசின் முகத்திரையைக் கிழிக்கும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்