minister anbil mahesh meet ilaiyaraaja

தமிழக அரசு பெண்களுக்காகக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு மறைந்த பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடலை கவிஞர் சுகிர்தராணி எழுதியுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார். இது தொடர்பாக அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, “தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானியை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணியின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பாடலை தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்தோடு இளையராஜாவோடு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Advertisment