டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் மே 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் முறைபடுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்பதை திமுக அரசு தடை விதித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முறைப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகளை, முறைபடுத்தும் குழு வழங்க வேண்டும். இந்த அமைப்புகளின் கூட்டங்கள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம்.
இதில் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லி சென்று கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாநிலங்களின் கருத்துகளை வலியுறுத்துவார்கள். தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி செல்லாமல், ஆன்லைன் வாயிலாக காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நீர்வளத் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தைவிட, காவிரி நீர் முறைபடுத்தும் கூட்டத்தில்தான் திடமான விவாதங்கள் நடத்தி தமிழகத்தின் உரிமையைக் காக்க முடியும். திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, நீர்வளத் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பெரிதாக விவாதிப்பதில்லை என்று சக அதிகாரிகளே குற்றம் சாட்டுவதாகச் செய்திகள் வருகின்றன.
கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகப் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே மேகதாது அணை கட்டுமான பிரச்சனையை மத்திய நீர்வளத் துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது. அதை அப்போதே நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற நீர்வளத் துறைச் செயலாளர் ஏமாற்றப்பட்டதாக, நீர்வளத் துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். நேரில் பங்கேற்கும்போதே இந்த நிலை என்றால், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் போது, தமிழகத்தின் உரிமைக் குரல் முழுமையாக ஒலிக்குமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டிய அரசு, இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது. எனவே டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.