அரசால் தடை செய்யப்பட்ட, சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட மீன்களில் ஒன்று ஆப்பிரிக்க தேளி வகை மீன்கள். அதிக கொழுப்பு சத்துக் கொண்ட இந்த மீன்களை சாப்பிட்டால் புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வரும் என்பதால் இவை உண்ணக்கூடாத மீன் வகைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர்நிலைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படும் பொழுது நாட்டு வகை மீன்களை உணவாக எடுத்துக் கொள்ளும் இந்த வகை தேளி மீன்கள், தான் வளர்க்கப்படும் இடத்தையே மோசமான நிலைக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு மிகவும் ஆபத்தானவை.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் கிலோ கணக்கில் ஆப்பிரிக்க தேளி மீன்கள் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்திருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் ஒரு டன் எடையுள்ள தேளி மீன்கள் மற்றும் டேங்க் கிளீனர் மீன்கள் இருந்தது தெரியவந்தது.
இந்த வகை மீன்கள் மற்ற மீன்களைப் போல் தாவரங்களை உண்ணுவதில்லை மற்ற மீன்களை சாப்பிட்டு அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அது வளர்க்கப்படும் நீர் நிலையையே மாசடைய வைத்து விடுகிறது. கைப்பற்றப்பட்ட ஆயிரம் கிலோ தேளி மீன்களையும் குழி தோண்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதைத்தனர்.