திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதனை உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு தடம் எண் 44 என்ற அரசு பேருந்து சென்று கொண்டுடிருந்தது. சரியான நேரத்தில் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பிய அந்த அரசு பேருந்து அரக்கோணம் நோக்கி பயணிகளுடன் சென்றது. அப்போது, அரசு பேருந்தில் மூன்று இளைஞர்கள் ஏறியுள்ளனர். அவர்கள் மூவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அரசு பேருந்தில் பணியில் இருந்த 42 வயதான நடத்துநர் ஐயப்பன் பயணிகடளிடம் டிக்கெட் கொடுத்து வந்தார். தொடர்ந்து, போதையில் இருந்ததாக கூறும் மூன்று இளைஞர்களிடமும், 'எங்கு செல்கிறீர்கள்?' எனக் கேட்டு டிக்கெட் எடுக்க கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு நடத்துனரிடம் சீரிய அந்த இளைஞர்கள், 'எது எங்களிடமே டிக்கெட் கேட்கிறாயா? நாங்கள் யார் என்று தெரியுமா?' எனத் திரைப்பட வசனங்கள் பேசி டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் கீழே இறங்குங்கள் என நடத்துநர் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள், 'எங்களின் பின்புலம் தெரியாமல் கீழே இறங்க சொல்கிறாயா?' எனக்கூறி நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
உடனே, பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பிரச்சனையில் தலையிட்டதால் நடத்துநர் தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டார். இதுதான் சமயம் எனக் காத்திருந்த அந்த மூன்று இளைஞர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து, இளைஞர்கள் தாக்கி பலத்த காயமடைந்த நடத்துநர் ஐயப்பன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் அரசு மருத்துவமனையில் சகிச்சைப் பெற்று வருகிறார். இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து நடத்துநர் ஐயப்பன் 'மப்பேடு' காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போதையில் நடத்துநரை தாக்கிய மூன்று இளைஞர்களைத் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு நடத்துநரை தாக்கிய புகாரில் பேரம்பாக்கம் புதிய காலனியைச் சேர்ந்த அய்யனார் மகன் ராகேஷ், இருளஞ்சேரி கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாரத் மகன் முகேஷ், அரக்கோணம் தாலுக்கா பழைய கேசாவரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜ் மகன் குணால் ஆகிய மூவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போதையில் நடத்துநரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் 21 வயது கூட நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் நடத்துநரை தாக்கிய குற்றத்தை மூவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே அரசு பேருந்தில் கஞ்சா போதையில் ஏறியதாக கூறும் 3 இளைஞர்கள் டிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கி சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது