Skip to main content

“என்னுடைய வழியில் ரொம்ப தெளிவா போய்ட்டு இருக்கேன்” - இளையராஜா

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
ilaiyaraajaa finish his symphony notes in 35 days

4 தசாப்தங்களுக்கு மேலாக தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள இளையராஜா, தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே அவரது வாழ்க்கை வரலாறு தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 2022ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மேலும் அவர் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமைக் கோரி வழக்கு தொடர்ந்ததன் காரணமாக விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது திரையுலகில் 48ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் இளையராஜா. இதை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 35 நாட்களில் முழுவதுமாக எதுவும் கலக்காத சிம்பொனியை எழுதி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னைப் பற்றி தினமும் எதோ ஒரு வகையில் இது போன்ற வீடியோக்கள் நிறைய வருவதை கேள்வி படுறேன். அதில் நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் மத்தவங்களை கவனிப்பது என்னுடைய வேலையில்லை. என்னுடைய வேலையைக் கவனிப்பது தான் என்னுடைய வேலை. என்னுடைய வழியில் ரொம்ப தெளிவா சுத்தமா போய்ட்டு இருக்கேன். நீங்க என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன்.   

படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டு, சில விழாக்களுக்கும் சென்று தலையை காட்டிவிட்டு வருகிறேன். இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் 35 நாட்களில் முழுவதுமாக சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். இந்தச் சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். ஃபிலிம் மியூசிக் என்பது வேறு, பிண்ணனி இசை என்பது வேறு, இது அனைத்தும் எதிரொலித்தால் அது சிம்பொனி கிடையாது. அதனால் அதை எதுவும் கலக்காத சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன்” எனப் பேசியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” - இளையராஜா உருக்கம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Ilayaraja said no to the birthday celebration due to the lost of his daughter

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது  உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட  பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  இன்று 80 வயதை கடந்து 81 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலை முதலே இளையராஜாவின் வீட்டின்முன்பு திரண்டனர். பின்பு ரசிகர்களை சந்தித்த இளையராஜா அவர்களின் வாழ்த்தினை பெற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறீர்கள். என் மகளை பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை; உங்களுக்காகத்தான் இந்த கொண்டாட்டம் எல்லாம்” என்று உருக்கமாக தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறைவால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

இளையராஜா பாடல் உரிமம் விவகாரம் - விஜய் ஆண்டனி பதில்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
vijay antony about ilaiyaraaja copy wright issue

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நடிக்க வந்ததிலிருந்து மற்ற படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இந்த வருட இறுதியில் மத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்” என்றார். 

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, “ராஜா சாரின் கம்பெனியில் உள்ள பாடல்களுக்கு அவர் தான் உரிமையாளர். மற்ற விஷயங்களுக்கு இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக படக்குழு கேட்டிருந்திருக்கலாம். படம் வெற்றி பெற்றவுடன் கமலை பார்த்தது போல் இளையராஜாவையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாடலுக்கான் உரிமம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டு பயன்படுத்தலாம். பிச்சைக்காரன் 2, கொலை, திமிரு பிடிச்சவன் ஆடியோ உரிமம் என்கிட்ட தான் இருக்கு. நானும் ஒரு ஆடியோ கம்பெனி நடத்தி வருகிறேன். அந்தப் பாடலை பயன்படுத்த நினைத்தால் என்னிடம் கேட்கலாம்” என்றார்.