காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற வளையாபதி, பிரபு ஆகியோருக்கு விசாரணை என்ற பெயரில் கொடும் சித்திரவதை நடந்ததைக் கண்டித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா பேசியதாவது “தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல இது. காவல் துறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பாக நேர்மையாக பணியாற்றி வரும் காவல் துறைக்கு எதிரான போராட்டமும் அல்ல இது. அதேவேளையில் அரசுக்கும் காவல்துறைக்கும் சமூகத்தில் அவப்பெயரை உருவாக்கும் வகையில் காவல் சித்திரவதை செய்து உள்ள ஒரு சில காவல் துறை அதிகாரிகளை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம்.
இதன் நோக்கம் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை தான். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளருக்கும், மாவட்ட அமைச்சருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்று இருக்கும் நிலையில் காஞ்சி காவல் துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தண்டனை வழங்கி உள்ளது கண்டனத்திற்கு உரியது.
கடந்த ஆகஸ்ட் 30 துவங்கி 14 நாட்கள் இன்றைய தேதி வரையில் நீதிமன்ற காவலில் வேலூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் வளையாபதி. இதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பிரபு காவல் சித்திரவதை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட முடியாமல் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் செயற்கை சுவாசம் வைத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர்கள் இருவருக்கும் காவல் துறையின் மூர்க்கத்தனமான தாக்குதல் காரணமாக 48 மணிநேரத்தில் ரத்தத்தில் ஏற்படும் ரசாயன மாற்றம் விசமாக மாறி உடலின் உள் அவையங்களை பாதித்து இருக்கிறது. எனவே தான் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு விருப்பத்தகாத நிகழ்வு ஏதும் நடந்து விடக்கூடாது என்று இயற்கை அன்னையை இறைஞ்சுகிறேன். இவர்களுக்கு முறையான நீதியினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.