கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வக்கிராமாரி கிராமத்தில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும் குடிநீருக்காக பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டிமேடு மற்றும் நாஞ்சலூர் கிராம பகுதிக்குச் சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் குழாய் உள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு குடிசை வீடு கட்டிக்கொண்டு குடிநீர் குழாயை உடைத்துள்ளதாகவும் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் செல்வகுமார், நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசை வீட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றி உள்ளனர்.