கடலூர் மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொலை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் விருத்தாசலம் காவல் நிலையம் பகுதிக்குள் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையிலான போலீசார் அதிரடி ஆய்வு பணியில் ஈடுபட்டு, 7 பேரை கைது செய்தனர். அதன்படி ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த பட்டுசாமி மகன் கோட்டான் என்கிற ராஜசேகர்(28), விருத்தாம்பிகை நகரை சேர்ந்த அன்பழகன் மகன் பூண்டி என்கிற குழந்தைவேலு(38), அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சூரி என்கிற சூரியபிரகாஷ்(28), சுப்பிரமணியன் மகன் வேலு என்கிற டயர் வண்டி வேலு (33), முல்லாத்தோட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன்(27), குப்பநத்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் அய்யாசாமி(58) மற்றும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுக்கா, சிலம்பூரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சுபாஷ்(36) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.