கஜா புயலையொட்டி காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடலூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் 'புயல் எச்சரிக்கை' கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"வெள்ள பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் முதல் தகவல் அளிப்பவர்கள் 3,126 நபர்கள் கண்டறியப்பட்டு அனைவரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீச்சல் வீரர்கள் 56 பேர் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் 25 நபர்கள் கண்டறியப்பட்டு அனைவரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநில பேரிடர் மீட்புக் குழுவில் பயிற்சி பெற்ற 117 காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் இரண்டு குழுக்களாக கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் 5 இடங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் அவரவர் கிராமத்தில் தங்கி இருக்கவும், முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் அவரவர் அலுவலகத்தில் இன்று இரவு தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத் துறை மூலம் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு போதுமான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் வாக்கிடாக்கி கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
43 கால்நடை பாதுகாப்பு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 219 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர்.
ஆவின் பால் மற்றும் பால் பவுடர் போதுமான அளவு இருப்பு உள்ளது. அரிசி 7504, சர்க்கரை 1056 மெட்ரிக் டன், கோதுமை 348 மெட்ரிக் டன் ஆகியவை இருப்பில் உள்ளது.
விளம்பர பதாகைகள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக அனைத்து துறைகளிலும் ஜேசிபி இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் பாதிப்புகள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடலூர் பேரிடர் கால வானொலி 107.8 பண்பலை அலைவரிசைகளில் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது கேட்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.