கடலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு யோகா மற்றும் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசன் ஒப்புதலின்பேரில் ஜூலை 09, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் உளவியல் மற்றும் யோகா மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்றது. இப்பயிற்சி அண்ணாமலை பல்கலைகழகம் கல்வியியல் புல முதல்வர் டாக்டர் ஞானதேவன் தலைமையில் யோக இயக்குநர் டாக்டர் வெங்கடாஜலபதி, டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் நீலகண்டன், டாக்டர் அய்யப்பராஜா, டாக்டர் ருக்மணி, சிவக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் மன கட்டுப்பாடு, மனதின் செயல்பாட்டை புரிந்து கொள்ளுதல், சமுதாய உறவு மேம்பாடு, தியானம், உடல் நலம் மற்றும் மனநலம் மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 காவல் ஆய்வாளர்கள் தேவேந்திரன், இராமதாஸ், குணசேகரன் உட்பட 44 காவல்துறையினர் பயிற்சி பெற்றனர். இப்பயிற்சி தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்துறையினர்க்கும் வழங்கப்படும் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.