கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை உறையூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு வந்த கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் எம்.பி அருண்மொழித்தேவனிடம், 'நாங்கள் அழைப்பு கொடுத்தால் நீங்கள் வருவதில்லை, பன்னீர்செல்வம் கூப்பிட்டால் மட்டும் விழாவில் கலந்து கொள்கிறீர்கள்..? நீங்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள்.." என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த வாக்குவாதம் அப்போது உறையூர் கிராமத்தில் சமாதானப் படுத்தப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் பண்ருட்டி செல்லும் வழியில் தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க அலுவலகத்திற்கு சென்ற பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் அவருடைய உதவியாளர் ராம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தில் புகுந்து கட்சி நிர்வாகிகளை தாக்கிவிட்டு, அலுவலகத்தை சூறையாடினர். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி என்பவர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பண்ருட்டி புதுப்பேட்டை அதிமுக நிர்வாகிகள், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், அவருடைய உதவியாளர் ராம்குமார், கோவிந்தன் மாடு ரமேஷ், இராமதாஸ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு தொடர்ந்து உள்ளனர். அதையடுத்து இருதரப்பினரும் மாறி மாறி மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் பண்ருட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் இரு தரப்பினரையும் கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சியின் இருதரப்பு கோஷ்டி மோதலால் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் பதட்டம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.