சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் நெடுந்தூர பயணிகளின் வசதிக்காக கழிவறை மற்றும் குளியலறை கடந்த 2001 ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் கட்டப்பட்டது. இந்த கழிவறை கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியதால் கழிவறையின் மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிதிலம் அடைந்தது.
இதனை அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த கழிவறையின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே சென்று சிமண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் கழிவறைக்கு பூட்டுப் போட்டு சீல் வைத்துள்ளனர்.
இதனால் கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் வெகுதொலைவில் இருந்து பயணம் செய்து பேருந்திலிருந்து கீழே இறங்கும் பயணிகள், அப்பகுதியில் உள்ள வணிகர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கழிவறை இல்லாமல் அவதி அடைகின்றனர். எனவே சீல் வைக்கப்பட்டுள்ள கழிவறையை இடித்துவிட்டு புதிய கழிவறை கட்டிடத்தை கட்டி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.ராஜா கூறுகையில், “சிதம்பரம் சுற்றுலா நகரமாகும். இங்கு ஒரு நாளைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் குறைந்தது 5 ஆயிரம் முதல் 10 பேர் வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு கழிவறை வசதிகள் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் கஞ்சிதொட்டிமுனையில் இருந்த கழிவறை பயன்படுத்த முடியாமல் சீல் வைத்துள்ளனர். அந்த கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நகரத்தில் கோடிக்கணக்கில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. குளம், வாய்க்கால்கள் ஓரம் குடியிருந்த மக்களின் வீடுகளை நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு என இடித்து விட்டு அங்கு கோடிக்கணக்கில் செலவு செய்து நடைபாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அதே நேரத்தில் கஞ்சித்தொட்டி பகுதி வணிகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், நெடுந்தூரம் பயணம்செய்து கஞ்சிதொட்டி முனை பேருந்து நிறுத்ததில் இறங்கும் பயணிகளுக்கு முக்கிய தேவையாக உள்ள இந்த கழிவறை மற்றும் குளியல் அறையை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்” எனக்கூறினார்.
மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகா, “கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணம் செய்து ஒரு பெண் கஞ்சி தொட்டி முனையில் பேருந்து நிறுத்ததில் இறங்கி கடை தெருவிற்கோ, அலுவலகத்திற்கு செல்லும்போது உடனடியாக இயற்கை உபாதை கழிக்க அவர்கள் எங்கு செல்வார்கள்? ஏற்கனவே கஞ்சி தொட்டியில் இருந்த கழிவறை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது கீழவீதி மற்றும் மேலவீதி தெற்கு வீதி சந்திப்பில் கழிவறை உள்ளது. அவர்கள் அவசரம் என்றால் முக்கால் கிலோமீட்டர் தூரத்திற்குமேல் சென்று தான் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளது. இதில் பல பேர் சர்க்கரை நோயாளிகளாலும் உள்ளனர். எனவே இந்த கழிவறையை உடனடியாக நகராட்சி நிர்வாகம் இடித்துவிட்டு புதிய கழிவறை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, “இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து புதிய கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.