விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசி, வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று (06.02.2025) நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது. இதனால் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும். எனவே வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. சீமான், அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். தொடர்ந்து 4 முறை நீதிமன்ற படி ஏறினால் தான் அவருக்கு நிதானம் வரும். அடுத்தவரை எரிச்சலூட்டும் வகையில் பேசுவதுதான் அவருக்கு வழக்கமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.