திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், உடனடியாக ஆசிரியரை விடுவிக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது பழையபாளையம். இங்கு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் ஆசிரியர் நாகராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று இரவு மகளிர் போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர். இந்நிலையில் இன்று காலை 'நாகராஜன் எந்த தவறும் செய்யவில்லை. இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்தில் கொடுக்கப்பட்ட பொய் புகார்' எனக்கூறி மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி முன்னே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வகுப்புக்குச் செல்ல வலியுறுத்தினர். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை தனித் துணை ஆட்சியர் சௌந்தர்யா மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு அதிகாரிகள் 'ஆசிரியர் நாகராஜால் குழந்தைகள் பாதிக்கப்பட்டது உண்மை. எனவே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர். அதேநேரம் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட பொய் புகாரில் ஆசிரியர் நாகராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை விடுதலை செய்யும் வரை நாங்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என ஒருபுறம் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.