கரோனா வைரஸ் பரவல் அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
டாஸ்மாக் மூடப்பட்டதால் குடிநோய்க்கு அடிமையானவர்கள், மது பிரியர்கள் வேறு வகையான போதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். மற்றொரு புறம், மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், பாக்கெட் சாராயம் விற்பனையும் பெருகி உள்ளது.
மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினரின் கெடுபிடிகள் அதிகமானதால், பலர் வீடுகளிலேயே சொந்த உபயோகத்திற்காகச் சாராயம் காய்ச்சும் குற்றங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மோரூரில் அய்யப்பன் (43) என்பவர் தன் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் அய்யப்பனும் அவருடைய நண்பர்களான சுப்ரமணி (40), மூர்த்தி (25) ஆகிய மூவரும் சேர்ந்து யூடியூப் வீடியோவைப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியது தெரிய வந்துள்ளது. இதைடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
அதேபோல், தீவட்டிப்பட்டியில் குக்கரில் சாராயம் காய்ச்சியதாக 3 பேர், ஏத்தாப்பூரில் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக 2 பேர் என ஒரே நாள் சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.