திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக சுங்கடி சாயத் தொழில் நடைபெற்று வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கெடுபிடியால் சின்னாளபட்டியில் சுங்குடி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் முயற்சியால் சுங்குடி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு கட்டிடத்திற்கான பணிகள் ஆரம்பிக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பொதுமக்களை தூண்டிவிட்டதால் சுங்குடி சுத்திகரிப்பு நிலையம் அமைய முடியாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சின்னாளபட்டி பகுதியில் சுங்குடி சாயப்பட்டறை செயல்படக்கூடாது என அறிவித்து பேரூராட்சி நிர்வாகம் கடந்த வாரம் சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் அமைச்சர் ஐ.பெரியசாமியை சாயப்பட்டறை உரிமையாளர்கள் சந்தித்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத அளவு சுங்குடி தொழிலை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கலைஞரில் தொடங்கி இன்றுவரை சுங்குடி மற்றும் கைத்தறி நெசவாளர்களை பாதுகாப்பது தி.மு.க. அரசு. இம்முறை தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மூன்று இடங்களில் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதை மாற்றுக்கட்சியினர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பொய் பிரச்சாரம் செய்ததால் சாய சுத்திகரிப்பு நிலையம் கட்ட முடியாமல் போய்விட்டது. சின்னாளபட்டியில் சுங்குடி தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், நூற்றுக்கணக்கான ஜவுளி உற்பத்தியாளர்களும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாயத் தொழிலாளர்களும் உள்ளனர். இதுநாள் வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் சுங்குடி சாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை அவர்கள் கண்டுகொள்வதுமில்லை. இதனால் தான் சின்னாளபட்டியில் இன்றுவரை சாய சுத்திகரிப்பு நிலையம் அமைய முடியாமல் போய்விட்டது. இனிமேலாவது ஜவுளி உற்பத்தியாளர்கள் சுங்குடி சாயத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதுதவிர சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள குளங்கள் மற்றும் வடிகால்களில் கலக்காத அளவிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என சுங்குடி சாயப்பட்டறை நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். அதன்பின்னர் சாய கழிவுநீர்கள், வடிகால்களில் இருந்து வரும் கழிவுநீர்கள் குளங்களில் கலக்காத அளவிற்கு வடிகால் அமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தங்கள் கோரிக்கையை ஏற்றுத் தொடர்ந்து தங்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சாயப்பட்டறை தொழிலாளர் சங்கத்தினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின்போது உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார்நத்தம் முருகேசன், நிலக்கோட்டை மணிகண்டன், சௌந்தரபாண்டியன், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.