தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் (30/11/2020) முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அளிப்பது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளிக்காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 'நிவர்' புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களிலும் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர். தலைமைச் செயலாளர் தலைமையில் 13 முறை மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. டிசம்பர் 15- ஆம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பு பணிக்காக இதுவரை ரூபாய் 7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றியதால் கரோனா பரவல் தடுக்கப்பட்டது. 'நிவர்' புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தைக் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது. 'இந்தியா டுடே' இதழின் விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது." என தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ குழுவுடன் இன்று மதியம் 02.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஆலோசிக்க உள்ளார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழு அளிக்கும் கருத்துகள் அடிப்படையில் புதிய தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்புகள், புதிய தளர்வுகளில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.