
கேரளாவில் கடுமையான மழை பெய்து வருகிறது. இடுக்கு, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் பெய்யும் கனத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதோடு, இதுவரை நிலச்சரிவாலும், பலத்த மழையாலும் 26 பேர் இறந்துள்ளனர்.
நீண்ட வருடங்களுக்கு பின் இப்படியொரு மழையை கேரளா மக்கள் சந்திப்பதால் ஸ்தம்பித்து உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளதால் கேரளா வருவாய்த்துறை மற்றும் காவல்துறையால் மீட்பு நடவடிக்கையில் தூரீதமாக இறங்க முடியாமல் தவிக்கின்றனர். கேரளாவுக்கு தேவையான நிதியுதவிகள் தமிழகரசால் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இராணுவத்தின் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி இராணுவ விமானத்தள மையத்தில் உள்ளது. இந்த குழுவில் இருந்து 3 பிரிவினர் கேரளாவுக்கு இன்று ஆகஸ்ட் 10ந்தேதி சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் என 90 பேர் மீட்பு குழுவில் உள்ளனர்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா விரைவில் இந்த இக்கட்டில் இருந்து மீள வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.