
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் விசாரணை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய அய்யப்பன் இன்று ஆஜரானார். விசாரணை முடிந்து திரும்பிய அய்யப்பன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ‘’1991ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றி கொண்டிருந்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். 75 நாளும் மருத்துவமனையில் தான் இருந்தேன், ஆனால் 3 முறை தான் ஜெயலலிதாவை பார்த்தேன்.
ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டார். நவம்பர் 19-ம் தேதி வார்டுக்கு மாற்றும் போதும் ஜெயலலிதாவை சந்தித்தேன். ஜெயலலிதாவின் கால்கள் எதுவும் அகற்றப்படவில்லை. ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டன எனக் கூறப்படுவது தவறானது’’ என கூறினார்.