தமிழகத்தில் தொடர்ந்து தனது எண்ணிக்கையை கரோனா வைரஸ் கூடிக்கொண்டே வருகிறது. அதில் முக்கிய நகரமாக இருக்கிறது ஈரோடு. ஈரோட்டில் மட்டும் இதுவரை 64 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்துவிட்டார். இதில் சிலருக்கு குணமாகியும் உள்ளது. ஈரோட்டில் இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் பரவுவதற்கு காரணம் டில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களும் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தவர்கள் தான். அப்படி அவர்களோடு தொடர்புடையவர்கள் தான் இந்த 64 பேரும்.
இதற்கிடையே இந்த வைரஸ் தொற்றில் ஏறக்குறைய இருபது பெண்களும் உள்ளார்கள். அதில் ஒருவர்தான் இஸ்லாமிய பெண்ணான அவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு குடும்பத்தினர் மூலம் இந்த வைரஸ் தொற்று அவருக்கு வந்தது. இந்த நிலையில் அவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவ நாள் நெருங்கியபடியால் மேலும் அவரை தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அந்தப் பெண்ணுக்கு அறுவைச்சிகிச்சை மூலம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவர்களில் மிகவும் தைரியமாக அர்ப்பணிப்போடு ஒரு குழுவினர் இதில் செயல்பட்டுள்ளார்கள்.
மகப்பேறு சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் இந்திரா, டாக்டர் திவ்யா மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் கார்த்தி ஆகியோர் அடங்கிய குழு அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கரோனா வைரஸ் தாக்கம் இருக்கும்போது, அந்த வார்த்தையைச் சொன்னாலே பய பீதியில் பலரும் இருக்கையில், அந்த வைரஸ் தொற்று உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தையும் அவரையும் நல்ல நிலையில் வைத்துள்ளது எல்லோருக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாகத்தான் இருக்கிறது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் திருமதி சவுண்டம்மாள் ஆகியோர் நேரில் சென்று மருத்துவர்களைப் பாராட்டினார்கள். இந்தப் பிரசவத்திற்கு பிறகு அங்குப் பணியாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை அழகாக உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் உனக்கு கரோனா வராது மகனே என எல்லோரும் அவர்களுக்குள் ஆறுதலாகக் கூறிக் கொண்டார்கள். தற்போது பிறந்த குழந்தை தனது தாயோடு தான் உள்ளது. அதேபோல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆறு வாரம் கழித்து அதன்பிறகுதான் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்வோம் எனவும் கூறி இருக்கிறார்கள்.
பெரும்பாலும் பிறந்த குழந்தைக்கு வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலகில் எத்தனையோ கொடூரங்களும் கொடுமைகளும் நிகழ்ந்து வருகிற இத்தருணத்தில் ஏதுமறியாத ஒரு பிஞ்சு இப்படி ஒரு வைரஸ் தொற்று உலகில் வலம் வரும் என அறிந்து இருக்குமா என்ன? காலச்சக்கரம் மனிதகுலத்திற்கு பல கேள்விகளைக் கொடுத்துக் கொண்டே செல்கிறது.